ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!

18 June 2026
 
S

ஆளுநர் உரை: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்!

18.06.2026

தங்கள் அரசின் அடிப்படைப் பணிகள் என்னவாகயிருக்கும் என்பதன் தொகுப்பாகத்தான் ஆளுநர் உரை அமைந்துள்ளது. உரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அரசானது கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருதல், உச்சநீதிமன்றத்தின் அமர்வை சென்னையில் அமைத்தல், உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குதல் போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமூச்சுடன் பாடுபட வேண்டும். பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ‘‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’ என்ற முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது. 

ஒன்றிய அரசானது தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதிப்பகிர்வை சட்ட ரீதியாகப் போராடிப் பெறுவதற்கு சட்ட வல்லுனர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும் என்பது அவசியமானதொரு நடவடிக்கையாகும். அதேசமயத்தில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட ‘‘கூட்டாட்சி மற்றும் மத்திய மாநில உறவுகள்” குறித்து மறுஆய்வு செய்து தீர்வுகளைத் தருவதற்காக 2025ல் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.குரியன் ஜோசப் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வழங்கிய பரிந்துரைகளை தவெக அரசு பரிசீலித்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நகரமயமாதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் குடிநீர், உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில திட்டங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் நிதி மற்றும் கிராம சபைகளுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து எந்தக்குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.

ஆளுநர் உரையில் காவிரிப்பிரச்னை, போதை கலாச்சாரம் ஒழிப்பு, பாலியல் வன்முறை போன்றவற்றைக் கையாள்வதில் மென்மையான போக்கே காணப்படுகிறது. இவற்றில் கடுமையான நிலைப்பாட்டை - செயல்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஆளுநர் உரை நிறைவேற்றவில்லை.

ஆ. அருணாச்சலம் MA., BL.,
பொதுச்செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post